• Thu. Nov 21st, 2024

பிக் பாஷ் லீக்கில் மீண்டும் இணைகிறார் சமரி அத்தப்பத்து

Jun 19, 2021

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணிக்காக மகளிர் பிக் பாஷ் லீக் இருபது 20 கிரிககெட் போட்டியில் விளையாடவுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிக் பாஷ் லீக்கில் சமரி அத்தப்பத்து 2017இல் மெல்பர்ன் ரெனகேட்ஸ் அணிக்காக முதல் தடவையாக விளையாடியிருந்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2017இல் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆட்டமிழக்காமல் 178 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் சமரி அத்தப்பத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பிரபல்யம் அடைந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சமரி அத்தப்பத்து குவித்த 178 ஓட்டங்களே தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாகும்.

இந்த சதத்துடன் மொத்தமாக 5 சதங்களை மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்;கெட் போட்டிகளில் குவித்துள்ளார்.

அத்துடன் மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் சமரி அத்தப்பத்து சதம் குவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2019இல் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் சமரி அத்தப்பத்து 66 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இவர் ஒருவர் மாத்திரமே இருவகை சர்வதேச மட்டுப்படுடத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் குவித்த இலங்கை வீராங்கனையாவார்.

‘சமரி அத்தப்பத்து போட்டிகளில் திருப்பங்களை ஏற்படுத்தி வெற்றியை ஈட்டிக்கொடுக்கக்கூடியவர் மட்டுமல்ல, எதிரணியிடமிருந்து ஆட்டத்தின் பிடியை பறித்தெடுக்கக்கூடிய திறமையும் உடையவர்’ என பேர்த் ஸ்கோர்ச்சர்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநர் ஷெல்லி நிட்ஷ்கே தெரிவித்தார்.