கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், புதிய கேரளாவை உருவாக்குவோம் என்று வைரலாகும் மோகன்லாலின் வீடியோ வெளியாகியுள்ளது.
வரதட்சணை கொடுமையின் காரணமாக கேரளாவில் கடந்த ஒரே வாரத்தில் 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் தோட்டம் மற்றும் ஒரு கார் என இத்தனை பொருட்களை கொடுத்தும், விஸ்மயா என்னும் இளம்பெண் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரால் சித்ரவதைக்கு ஆளானதையடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் கொடூர சம்பவத்தைக் கண்டித்தும், வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும், கேரளா முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்தனர். மேலும், வரதட்சணை கொடுக்க மாட்டோம் என்று பெண்களும் புகைப்படங்களை வெளியிட்டு, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த நிலையில், நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆராட்டு’ படக்காட்சியின் வீடியோவை வெளியிட்டு, வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
அதில், “பெண்களுக்கு திருமணத்தைவிட சுயமரியாதைதான் முக்கியம். வரதட்சணை வாங்குவதும் தவறு, கொடுப்பதும் தவறு. வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுங்கள். பெண்களுக்கு நீதியும் சமத்துவமும் இருக்கும் ஒரு கேரளாவை உருவாக்குவோம்,” என நடிகர் மோகன்லால் கூறியுள்ளார்.