‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. 1990-களில் காஷ்மீரில் இந்து பண்டிட்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் பண்டிட்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பிய சம்பவங்களை வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.
இதில், அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக் அக்னிகோத்ரி இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு வரி விலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்து உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், தி காஷ்மீர் பைல்ஸ் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில், படம் குறித்து இந்தி திரையுலகினர் கருத்து தெரிவிக்காமல் இருப்பதாக கங்கனா ரணாவத் சாடி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ’தி காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பாக இந்தி திரையுலகில் நிலவும் அமைதியை கவனியுங்கள். படம் கட்டுக்கதையை தகர்த்துள்ளது. இந்த படம் குறித்து இந்தி திரையுலகினர் அமைதியை கடைப்பிடிப்பது ஏன் என்று தெரியவில்லை. இந்த வருடத்தின் பெரிய வெற்றி படமாக இது இருக்கும்’ என்று கூறியுள்ளார்.