• Wed. Dec 4th, 2024

கேபிக்கு கிடைத்த கதாநாயகி வாய்ப்பு!

Dec 6, 2021

விஜய் தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஹிட்டான சீரியலின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் பிக்பாஸ் புகழ் கேபி.

கேப்ரியல்லா என்று சொல்வதைவிட கேபி என்று சொன்னால் எல்லாருமே எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் சுட்டிப்பெண் கேபி.

திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்த கேபி, தற்போது சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

ஒரே நேரத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என்று இரண்டு தளங்களிலும் கலக்கியவர் கேப்ரியல்லா.

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக, வாய் பேச முடியாத கேரக்டரில் அற்புதமாக நடித்தவர் கேபி.

பின்னர், சென்னையில் ஒரு நாள் மற்றும் அப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பு தவிர்த்து, நடனம் மீது தீராத ஆர்வமும் அற்புதமாக நடனம் ஆடக்கூடிய திறனும் கொண்டவர் கேபி. தன்னுடைய ஒன்பது வயதில் ஜோடி ஜூனியர் என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் விஜய் டிவியில் அறிமுகமானார் கேபி.

7ம் வகுப்பு சி பிரிவு என்ற சீரியலிலும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். பின்னர், ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, டைட்டிலும் வென்றார்.

பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்ட போது, 3 திரைப்படத்தில் நடித்த குட்டிப்பெண்ணா இது என்று பலரும் ஆச்சரியப்பட்டனர்.

பல்வேறு போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தவர் கேபி. தைரியமான பேச்சு, தெளிவான சிந்தனை என்று பிக்பாஸ் போட்டியாளராக பலர் மனதையும் கவர்ந்தார் கேபி.

அனைவருக்குமே செல்லமாக வலம் வந்த கேபி, வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவதை என்பதை உணர்ந்த பிறகு, ஐந்து லட்ச ரூபாய் பண பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆனால் இவரின் இந்த முடிவும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் சீசன் 4ன் சக போட்டியாளர் ஆஜித்துடன் நல்ல நட்பை வளர்த்துக் கொண்ட கேபி, அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து கலந்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கேபி தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

திரைப்படங்களில் வாய்ப்பு தேடுவதாகவும் இவர் குறிப்பிட்டிருந்தார். திரைப்படங்களில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த கேபிக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளத்து.

பவித்ரா மற்றும் திரவியம் ஆகிய இருவரும் நாயகன் நாயகியாக நடித்த ஈரமான ரோஜாவே மிகப்பெரிய அளவு சூப்பர்ஹிட் சீரியலாகும்.

ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகி வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய கேபி, சீரியல் ஹீரோயினாகவும் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.