• Sun. Dec 8th, 2024

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் இணையும் புதிய படம்

Dec 28, 2021

நடிகர் விஜய் சேதுபதி ‘மெர்ரி கிஸ்துமஸ்’ என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். கத்ரினா கைஃப் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தான். விஜய்சேதுபதிக்கு மட்டும் இயற்கை 64 மணி நேரம் தந்திருக்கிறதா? தமிழ், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் நடிக்கிறார்.

ஒருபக்கம் திரைப்படங்கள், இன்னொரு பக்கம் வெப் தொடர்கள்.

அதுவும் ஒன்றிரண்டு அல்ல, டஜன் கணக்கில்.விஜய் சேதுபதி நடித்த இந்திப் படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் மேலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

மெர்ரி கிறிஸ்துமஸ் என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்குகிறவர் ஸ்ரீராம் ராகவன். ஜானி கத்தார், பத்லாபூர், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். த்ரில்லர் படங்களைப் பொறுத்தவரை இவர் இந்தித் திரையுலகின் மாஸ்டர்.

மெர்ரி கிறிஸ்துமஸில் விஜய்சேதுபதியுடன் கத்ரினா கைஃப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த மாதம் நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்து கொண்ட கத்ரினா திருமணத்துக்குப் பின் ஒப்புக் கொண்ட முதல் படம் இது.

“புதிய தொடக்கம். ஸ்ரீராம் ராகவனின் மெர்ரி கிறிஸ்துமஸ் மூலம் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பியுள்ளேன். அவரால் இயக்கப்படுவதை பெரும் மதிப்பாக கருதுகிறேன்” என்று கூறியிருக்கிற கத்ரினா, விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தை டிப்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. 2022 டிசம்பர் 23 படம் வெளியாகும் என வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது.