• Thu. Sep 5th, 2024

அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்

Jan 20, 2022

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது.

பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன் என்றார்.

இதற்கு நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்துள்ளார் என சர்ச்சை எழுந்தது.

நடிகர் சித்தார்த்தின் பதிவு ஆபாசமாக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பிலும் கண்டனக்குரல்கள் எழுந்தன.

பெண் என்றும் பாராமல் சாய்னா நேவாலை நடிகர் சித்தார்த் தரக்குறைவாக விமர்சித்ததாக பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது.

சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மராட்டிய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. ஜதராபாத் சைபர் கிரைம் போலீசிலும் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.

அது ஆபாசமானது என்றும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும். அவரது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும்
பெண்ணியவாதியும், சமூக ஆர்வலருமான பிருந்தா அடிகே தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்.

இதற்கு பதிலளித்த நேவால், சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களை நீங்கள் இவ்வாறு குறி வைக்கக்கூடாது.

பரவாயில்லை. நான் இதுபற்றி கவலை கொள்ளவில்லை. நான் இப்போது இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கடவுள் ஆசீர்வதிப்பார் என்றார்.

இந்த நிலையில், சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.