• Sun. Dec 8th, 2024

ஆரம்பித்தது வலிமை!

Feb 24, 2022

நடிகர் அஜித்குமாரை நாயகனாக வைத்து போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத்குமார், பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

முன்னதாக பொங்கல் தினத்தன்று இந்தப் படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு இவர்கள் கூட்டணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கான அட்டகாசமான படமாக உருவாகி உள்ள வலிமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இன்று காலை 4 மணிக்கு வலிமை படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக அதிகாலையிலேயே திரையரங்கிற்கு அஜித் ரசிகர்கள் படையெடுத்தனர். சில திரைஅரங்குகளில் ரசிகர்கள் உற்சாகத்தில் அஜித்தின் கட்-அவுட் மற்றும் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நகரங்களில் 90 சதவீத திரையரங்குகளில் வலிமை தான் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது.

பைக் ரேஸ், ஆக்‌ஷன், ஆகாயத்தில் அதிரடி சண்டை என வலிமை பட காட்சிகள் அதகளம் செய்வதற்கு இடையில், அஜித் குமாரின் அம்மா பாச பாடலும் ரசிகர்களை வருடி வருகிறது.