• Sun. Nov 17th, 2024

இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் 37 லட்சம் பேர் – மறுக்கும் மத்திய அமைச்சகம்

Feb 18, 2022

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா தொற்றால் 4.6 லட்சம் பேர் இறந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆனால் 32 லட்சம் முதல் 37 லட்சம் வரையிலானோர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றின் அடிப்படையில் சில ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன.

இந்த தகவல்களை மறுக்கும் விதத்தில் மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய தகவல்கள் வருமாறு:-

இந்த அறிக்கைகள் தவறானவை என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. அவை உண்மையை அடிப்படையாகக்கொண்டவை அல்ல. ஊகமானவை.

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகைப்படுத்தலின் அடிப்படையில், கொரோனா இறப்புகளை வகைப்படுத்த அரசு ஒரு விரிவான வரையறையை வைத்துள்ளது. இது மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் அதை பின்பற்றுகின்றன.

களத்தில் சில இறப்புகள் பதிவாகவில்லை என்றால் அவற்றை கணக்கில் கொண்டுவந்து இறப்பு எண்ணிக்கையை புதுப்பிக்குமாறு மாநிலங்களை அரசு வலியுறுத்தி வருகிறது.

ஊடகங்களில் வெளியான அறிக்கைகளில் கூறப்பட்ட ஆய்வில் கேரள மக்கள், இந்திய ரெயில்வே ஊழியர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கர்நாடக பள்ளி ஆசிரியர்கள் என 4 குழு மக்கள் தொகையில், முக்கோண செயல்முறையை பயன்படுத்தி உள்ளனர். வரையறுக்கப்பட்ட தரவுத்தொகுப்புகள் மற்றும் சில குறிப்பிட்ட ஊகங்களை அடிப்படையாகக் கொண்ட அத்தகைய கணிப்புகள், எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து எண்களை விரிவுபடுத்துகிறபோது மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கொரோனா தரவு மேலாண்மை மற்றும் கொரோனா நோயால் ஏற்படும் இறப்புகளை பதிவு செய்வதற்கு வலுவான அமைப்பு, அரசிடம் உள்ளது. வெளிப்படையான அணுகுமுறையை அரசு பின்பற்றி உள்ளது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

பதிவாகும் இறப்பு எண்ணிக்கையில் முரண்பாட்டைத் தவிர்க்க உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் அடிப்படையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனைத்து இறப்புகளையும் சரியாக பதிவு செய்வதற்கு சரியான வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பலியானோர் குடும்பத்தினர் இழப்பீடு பெற தகுதியானவர்கள். இந்த செயல்முறை சுப்ரீம் கோர்ட்டினால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

எனவே கொரோனா இறப்புகளை குறைவாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. குடும்பங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் தயக்கம் அல்லது இயலாமை காரணமாக குறைந்த எண்ணிக்கை ஏற்பட்டது என்ற முடிவு தவறானது.