• Sun. Dec 1st, 2024

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

Jan 10, 2022

நாடு முழுவதும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்துவிட்டது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடந்தாலும், மற்றொரு பக்கம் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இன்று(10) வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து வந்ததால், கடந்த 6-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முடிவடைய உள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச்செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

தற்போது, கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளதால், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இம்மாதம் இறுதிவரை நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது.

மேலும், கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. வரும் 14-ந் தேதி பொங்கல் பண்டிகை வருகிறது. எனவே, பொங்கல் பண்டிகைக்கு பிறகு, கொரோனா பரவலின் வேகத்தை பொறுத்து ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.