இந்தியாவின் கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசி போட பயந்து கிராம மக்கள் மதுகுடித்து வருகிறார்கள். இதனால் தடுப்பூசி போட தினமும் கிராமத்துக்கு வரும் சுகாதாரத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசும், கர்நாடக அரசும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து கிராமத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மதுகுடிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக யாதகிரி மாவட்டம் ஒனகெரே கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் சென்றுள்ளனர்.
ஆனால் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் தடுப்பூசி போட பயந்துள்ளனர். இதற்காக அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். மதுபானம் குடித்தால் கொரோனா தடுப்பூசி போடமாட்டார்கள் என்பதால் அவர்கள் தினமும் காலையிலேயே மதுபானம் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருகின்றது. இதனால் தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறையினர் திணறி வருகின்றனர்.