• Fri. Jul 26th, 2024

ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்

Jan 18, 2022

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு காரணமாக நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக இலங்கையின் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

நீண்ட வார இறுதி விடுமுறையில் பொதுமக்களின் ஒன்றுகூடல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்களில் பதிவாகும் நாளாந்த கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் மாறுபாட்டின் காரணமாக உலகம் முழுவதும் குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவில் நோய்த்தொற்று விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையிலும் நோய்த்தொற்றுகள் சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அதிக பரவல் தன்மை காரணமாக நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

தடுப்பூசி திட்டத்தின் வெற்றியின் காரணமாக, கொரோனா வைரஸ் தொடர்பான மரணங்கள் எண்ணிக்கை மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பன குறைந்துள்ளது என்றார்.

20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் 12-15 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசிகள் தொடர்பான தவறான தகவல்கள் பரவி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற கூற்றுக்கள் அறிவியல் சோதனைகள் மூலம் சரிபார்க்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

எனவே வைரஸுக்கு எதிராக கணிசமான பாதுகாப்பை வழங்குவதால், அனைத்து நபர்களும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

அனைத்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கொரோனா வைரஸின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதால், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் புதிய மாறுபாடுகளை அடையாளம் காணும் பரிசோதனையைப் போல, நாட்டிலுள்ள பிற பல்கலைக்கழகங்களிலும் நடத்துவதற்கு வசதி செய்யுமாறு சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.