• Thu. Nov 28th, 2024

ரஷியா மீது கண்டனம் – வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா!

Feb 26, 2022

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க ஐ.நா. சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

11 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தபோதும் ரஷியா தனக்கு உள்ள வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்தது. இதனால், உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.