தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இலங்கைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி, கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.நா. ஆணையாளரின் இலங்கை தொடர்பான சமீபத்திய அறிக்கை குறித்த கலந்துரையாடலின் போதே இந்தியத் தூதுவர் இந்திரமணி பாண்டே, இதனை வலியுறுத்தினார்.
தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த தனது உறுதிப்பாட்டை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதன் காரணமாகவே கடந்த ஆண்டு, இலங்கை மீதான தீர்மானம் மீது வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச சமூகத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்பட வேண்டும் என்றும் 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் இந்திரமணி பாண்டே கேட்டுக்கொண்டார்.