• Fri. Oct 18th, 2024

மஹிந்தவின் ATM அட்டையூடாக 30 மில்லியன் ரூபாய் மோசடி

Jan 25, 2022

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரின் தனிப்பட்ட செயலாளராகக் கடமையாற்றிய உதித லொக்கு பண்டார சுமார் 30 மில்லியன் ரூபாயை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போதே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் மிகவும் சூட்சுமமான முறையில் அவ்வப்போது பணம் பெறப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து, அதற்காக வழங்கப்பட்ட ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்த பின்னரும் உதித லொக்கு பண்டார மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராகக் கடமையாற்றினார்.

மேலும் அவர் ஒருமுறை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதுடன் கடந்த பொதுத் தேர்தலில் அப்புத்தளை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.