• Sat. Jul 20th, 2024

இலங்கையில் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணத்தினால் ஆபத்து!

Feb 3, 2022

இலங்கையின் நிதி நெருக்கடியை சீர்செய்ய அரசாங்கம் பெருமளவு பணத்தைப் புதிதாக அச்சடித்தமையானது நாட்டின் பொருளாதாரத்தில் மிக மோசமான தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வழமையாகப் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு நூற்றுக்கு 40 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

பணத்தை அச்சடிப்பதால் நாட்டின் பொருளாதாரத்தில் மிகமோசமான தாக்கங்கள் ஏற்படுவதுடன் மாத்திரமன்றி, இது அரசாங்கம் நாட்டு மக்களுக்கு இழைக்கின்ற மிகப்பெரும் பாவச்செயலாகும்.

அமெரிக்க டொலர் ஒன்றுக்கெதிரான ரூபாவின் உத்தியோகபூர்வ பெறுமதி 198 ரூபாவிலிருந்து 203 ரூபாவிற்குள் பேணுப்படுவதன் விளைவாக கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அண்மையகாலங்களில் நாட்டிற்குள் இடம்பெறும் டொலர் உட்பாய்ச்சல் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை கடன்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதனை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகள் சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச நாணய நிதியத்துடனும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் எவையும் முன்னெடுக்கப்படாது என்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் பேசப்போவதில்லை என்றும் மத்திய வங்கி மீண்டும் அறிவித்திருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் தீர்மானமெடுக்கும் அதிகாரத்திலுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துக் கலந்துரையாடி, ஒரேவிதமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகின்றோம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.