இலங்கையில் 04ஆவது கோவிட் அலை உருவாகும் அபாய கட்டம் இருப்பதாக விசேட மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அவ்வாறு எந்த அறிகுறியும் இலங்கையில் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, மருத்துவர்கள் பொய்ப்பிரசாரம் செய்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன் போராட்டம் செய்கின்ற ஆசிரியர்கள் பற்றியும் அவர் கடும் விமர்சனம் வெளியிட்டார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
“04 ஆவது அலையின் மிக அருகில் நாங்கள் வந்துவிட்டோம் என்று சில மருத்துவர்கள் பொய்யான பிரசாரத்தை செய்துள்ளனர். அரசாங்கம் மீது கொரோனா விடயத்தில் விரல் நீட்ட முடியாது.
முதலாவது கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக தடுத்தோம். இரண்டாவது சுற்றில் எமது நாடே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் 10ஆவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டிருந்தது.
கடந்த வாரத்தில் ஆசிய வலயத்தில் தடுப்பூசிகளை அளித்துவரும் நாடுகளின் பட்டியலில் நாங்கள் முன்னிலைவகிக்கின்றோம். இந்த தொற்றின் பல திரிபுகள் வருகின்றன. நாடு என்கிற வகையில் நாம் வீதிகளில் இறங்கிப் போராட்டம் செய்வதல்ல.
அரசாங்கம் வழங்குகின்ற தடுப்பூசிகளைப் பெற்று ஒன்லைன் கற்றலை செய்ய முடியாது என்று போராட்டம் செய்கின்றனர். தடுப்பூசி பெற்ற பின், ஒன்லைன் ஊடாக கற்பித்தலுக்கு அல்ல, போராட்டம் செய்யவே செல்கின்றனர்.
உலகில் முதல்நாடாக இந்த விடயத்தில் நாங்கள் இருக்கின்றோம். தாதிகள் பணிபகிஷ்கரிப்பு செய்கையில் மருத்துவர்கள் வேறு விடயத்தை தெரிவிக்கின்றனர். தாதியர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கின்றபோது மருத்துவர்கள் போராடுகின்றனர்.
சுகாதார பரிசோதகர்கள் கஸ்டப்படுகின்ற நிலையில் தினமும் மாலை அதன் தலைவர் சென்று ஊடகங்களுக்கு முன்பாக அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். அவர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
எந்த வழியிலும் பணிகளை செய்யாத குமுதேஷ் என்பவர், தினமும் ஊடகங்களுக்கு முன் விமர்சனம் செய்கின்றார். அத்துடன் ஆண் தாதியொருவரும் அவ்வாறு செய்கின்றார்.
நாடாளுமன்றத்தில் ஒருநாள் தான் ஆசனத்தில் இருந்தார். ஆனால் அவரும் சொகுசு வாகன இறக்குமதிக்கான பத்திரத்தைப் பெற்றுக்கொண்டார். இவர்கள்தான் கோவிட் தடுப்பு பற்றி கருத்து வெளியிடுகின்றனர்” எனத் தெரிவித்தார்