
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி பாணந்துறை – கெசல்வத்த பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெசல்வத்த பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு புறம்பாக திருமண நிகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது பொலிஸார் , சுகாதார பிரிவினர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுடன் சம்பவ இடத்துக்குச் சென்றுபோது அங்கு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளதற்கு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட 8 பெண்கள் உட்பட 20 பேரை அவ்விடத்திலேயே தனிமைப்படுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதோடு வேறு எவரேனும் அங்கு வந்து சென்றுள்ளார்களா என்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய இதன்போது , தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும் , அவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளுக்கு கீழும், தண்டனை சட்டக்கோவையின் சட்டவிதிகளுக்கு கீழும் வழக்கு தொடரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் திருமண நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் பதிவு திருமணம் செய்ய முடியும். அதற்காக திருமண தம்பதியினர், திருமண பதிவாளர் உட்பட 15 பேர் என்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.