• Wed. Nov 20th, 2024

அபுதாபி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இலங்கை

Jan 19, 2022

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொதுமக்கள் தலத்தின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று (18) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய சமாதானம் மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆறுபேர் காயமடைந்திருந்தனர்.

நேற்று முன்தினம் (17) எரிபொருள் ஏற்றிச் சென்ற மூன்று பவுஸர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் பகுதியிலுள்ள தளத்தில் தீப்பரவல் ஏற்பட்டது.

எமனின் ஈரானுடன் இணைந்த ஹவுதி இயக்கம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தியதாக உரிமை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.