தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றார்கள் ஆனால் எமது அரசியல் வாதிகளிடம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த ஒரு திட்டமும் இல்லை. நிகழ்ச்சி நிரலும் இல்லை.
அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை.
ஏதாவது ஒரு சம்பவம் என்றால் முதல் நாள் கூட்டத்தினை கூட்டி ஒரு அறிக்கையை தயாரித்து அதை வாசித்துவிட்டு செல்வது தான் தற்போதுள்ள நிலைமை. அது மாற்றியமைக்கப்பட வேண்டும்.
குறிப்பாக வடக்கு கிழக்கை மனதளவில் ஒற்றுமையாக்க வேண்டும். அத்தோடு வடகிழக்கை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் எவ்வாறு முன்னேற்றலாம் அதற்கென்று ஒரு நிகழ்ச்சி நிரல் ஒரு திட்டமிடல் எங்களிடம் இல்லை.
நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்தும் அவ்வாறே இருக்கத் தேவையில்லை. எமக்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது. அவற்றினை காப்பாற்றுவதற்கு முதலில் நமது அரசியல்வாதிகள் செயற்படவேண்டும்.
ஏனைய உலக நாடுகளில் அந்த நாடுகளின் தயாரிப்புகளில் அந்த நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படும். ஆனால் யாழ்ப்பாண தயாரிப்பு என்று ஏதாவது உள்ளதா? அரசியல்வாதிகள் யாராவது எதையாவது சுட்டிக்காட்டுகிறார்களா இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.