ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான துஷ்பிரயோகங்கள் மற்றும், மக்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைவது குறித்து தங்கள் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச மனித உரிமை கடமைகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை கொடுக்க தங்கள் விருப்பத்தை மற்ற நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தொடர்ச்சியான சர்வதேச கவனமும் அழுத்தமும் சிறுபான்மை சமூகங்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர் எதிர்கொள்ளும் அபாயங்களைக் குறைக்க உதவும் என்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி கூறியுள்ளார்.
மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினரை கைது செய்து அவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.