ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை காத்துக் கொள்வதற்காக உக்ரைன் மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இந்த எண்ணிக்கை தற்போது 8.74 லட்சமாக இருப்பதாகவும், இது விரைவில் 10 லட்சத்தை எட்டும் என்றும் ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை வெளியிட்டு உள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷபியா மண்டூ கூறுகையில், ‘கடந்த 1-ம் தேதி இருந்து மட்டுமே உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று வரும் உக்ரைன் அகதிகளின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து இருக்கிறது’ என தெரிவித்தார்.
முன்னதாக உக்ரைன் போர் அகதிகள் பிரச்சினை இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியாக இருக்கும் என நேற்று முன்தினம் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறக்கூடும் என ஐ.நா. கணித்திருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கையை மறு மதிப்பீடு செய்ய இருப்பதாக கூறியுள்ளது.
உக்ரைன் அகதிகளில் அதிகபட்சமாக சுமார் 4.54 லட்சம் பேர் போலந்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹங்கேரியில் 1.16 லட்சத்தினரும், மால்டோவாவில் 79 ஆயிரம் பேரும், ஐரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாகியாவில் 67 ஆயிரம் பேரும் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.