• Fri. Jul 26th, 2024

புளோரிடாவில் இடிந்து விழுந்த 12 மாடி குடியிருப்பு ; ஏப்ரல் மாதத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Jun 30, 2021

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே கடந்த வியாழக்கிழமை 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது.

இந்த விபத்தில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 149 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

இந்நிலையில், அடுக்குமாடி கட்டிடத்தின் குடியிருப்பாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கட்டிடத்தின் நிலைமை குறித்து எச்சரிக்கை கடிதம் அனுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.

இந்த கடிதத்தை அமெரிக்க ஊடகங்கள் பெற்று அறிக்கை செய்துள்ளன. அக் கடிதம் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட சங்கத்தின் தலைவரால் அனுப்பப்பட்டுள்ளது.

மியாமியின் வடக்கே சர்ப்சைடில் உள்ள சாம்ப்லைன் டவர்ஸ் தெற்கு கட்டிடம் கட்டமைப்பு சிக்கல்களை அறிந்திருந்தது என்பதற்கான ஆதாரங்களை வழங்கும் ஆவணங்களின் வரிசையில் இந்த கடிதமும் ஒன்றாகும்.

கொடிய பேரழிவு தொடர்பாக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடியிருப்பு இடிந்து விழுந்தமைக்கு பொறுப்பற்ற மற்றும் அலட்சியமான நடத்தையே காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சாம்ப்லைன் டவர்ஸ் சவுத் காண்டோமினியம் அசோசியேஷனின் தலைவர் ஏப்ரல் மாதத்தில் அனுப்பிய கடிதத்தில், கவனிக்கத்தக்க சேதம்,கணிசமாக மோசமாகிவிட்டது என்றும் கொன்கிரீட் சரிவு அதிகரிக்கிறது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குடியிருப்பு இடிந்து விழுந்த இடத்தில் சுமார் 1,360,000 கிலோ கொன்கிரீட் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாக மியாமி பகுதி தீயணைப்பு நிலைய தலைவர் ஆலன் கொமின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஜில் பைடனும் இந்த வார இறுதியில் சம்பவத்தை நேரில் சென்று பார்வையிடுவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி அவசர சேவைகளுக்கு நன்றி தெரிவிப்பார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.