• Sat. Dec 7th, 2024

தென் ஆபிரிக்காவில் 10 குழந்தைகளை பிரசவித்த பெண்ணால் சர்ச்சை

Jun 18, 2021

தென் ஆபிரிக்காவில் கோஷியம் சீதோல் (37) என்ற பெண் ஒருவர் ஒரே தடவையில் 10 குழந்தைகளை பிரசவித்ததாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சர்வதேச பத்திரிகையொன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குழந்தை பிரசவம் தொடர்பில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 குழந்தைகளை பிரசவித்த பெண் இதுவரையில் தனது குழந்தைகளை வெளி உலகுக்கு காண்பிக்கவில்லை என்று குறித்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தமது அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்தவொரு தனியார் மற்றும் அரச வைத்தியசாலைகளிலும் இதுபோன்ற குழந்தை பிரசவங்கள் பதிவாகவில்லை என தென்ஆபிரிக்க கவுடெங்க மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தென் ஆபிரிக்க பெண்ணொருவர் 7 ஆண் குழந்தைகளையும், 3 பெண் குழந்தைகளையும் பிரசவித்துள்ளதாக கடந்த வாரம் தென் ஆபிரிக்க ஊடகங்கள் உட்பட மேலும் பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், இவ்வாறான செய்திகள் மாத்திரமே பகிரப்படுவதாகவும், தாம் இதுவரை அக்குழந்தைகளின் புகைப்படத்தையாவது பார்த்திருக்கவில்லை என்றும் குறித்த பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தமது வைத்தியசாலையில் எந்தவொரு பெண்ணும் 10 குழந்தைகளை பிரசவிக்கவில்லை என மேற்படி பெண் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் வைத்தியசாலையின் வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், அப்பெண்ணின் காதலனது சகோதரி கூறுகையில், உலகளாவிய ரீதியில் கொவிட் பரவிவரும் சந்தர்ப்பத்தில் தனது சகோரனுக்கு இவ்வாறான வரப்பிரசாதம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தமது பண்பாட்டு முறைகளுக்கமைய, கர்ப்பிணியையும், குழந்தைகளையும் மிகவும் மென்மையாக கவனித்துகொள்ளப்படுவர் என்றும், அவசியமான நேரத்தில் குழந்தைகள் வெளி உலகத்துக்கு காண்பிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உரிய திகதிக்கு முன்னதாக இக்குழந்தைகள் பிறந்ததால், அவற்றுக்கு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.