ஜப்பான் சென்றுள்ள உகண்டா ஒலிம்பிக் குழுவில் மேலும் ஒருவர் கோரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உகண்டா ஒலிம்பிக் குத்துச்சண்டை குழுவினர் ஜப்பான் சென்றடைந்தபோது பயிற்றுர் ஒருவருக்கு கோரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு மாதம் இருப்பதை ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகள் இன்று கொண்டாடியபோது இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சனிக்கிழமை ஒசாக்கா பிராந்தியாத்தில் உள்ள இஸுமிசானோ நகரில் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்காக உகண்டா ஒலிம்பிக் குழுவினர் ஜப்பான் சென்றடைந்தனர். அவர்கள் டோக்கியோ, நரிட்டா விமான நிலையத்தை அடைந்தபோது அவர்களில் பயிற்றுநர் ஒருவருக்கு தொற்றுக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
உகண்டாவின் 8 பேரைக் கொண்ட ஒலிம்பிக் குழுவினரும் அவர்களுடன் உகண்டாவிலிருந்து சென்ற இணைப்பாளர் ஒருவரும் இஸூமிசானோவில் பயிற்சிகளைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் தொற்று ஏற்பட்ட பயிற்றுநருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என உகண்டா ஒலிம்பிக் குழுவினரும் இணைப்பாளரும் கருதப்படுவதால் அவர்கள் ஜூலை 3ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் அவர்களது பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் எதிர்மறையாக இருந்ததாக நகர அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு 22ஆம் திகதி நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் ஒருவரது அறிக்கை நேர்மறையாக இருப்பதாக இஸுமிசானோ நகர அதிகாரி ஒருவர் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.
இதனை அடுத்து உகண்டா ஒலிம்பிக் குழுவினர் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும்வகையில் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.