• Thu. Nov 21st, 2024

வெளிநாடொன்றில் பணிப்பெண்ணைக் கொலை செய்த காயத்திரிக்கு தண்டனை!

Jun 22, 2021

சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து, பட்டினியிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் காயத்திரி முருகேயனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

பொலிஸ் அதிகாரி ஒருவரின் மனைவியான காயத்திரி முருகேயன், மியன்மாரைச் சேர்ந்த தனது வீட்டுப் பணிப்பெண்ணை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

பியாங் என்கேய் டொன் (Piang Ngaih Don) குறித்த பணிப்பெண் 2016 ஆம் ஆண்டு காயங்கள் காரணமாக இறந்தார். அப்போது அவரின் எடை வெறும் 24 கிலோகிராம் (53 இறாத்தல்) மாத்திரமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டது,

இது தொடர்பான வழக்கு விசாரணையில் 28 குற்றச்சாட்டுகள் தொடர்பில் தான் குற்றவாளி என 40 வயதான காயத்திரி முருகேயன் (Gaiyathiri Murugayan ) ஒப்புக்கொண்டிருந்தார்.

2015 ஆம் ஆண்டு தனது முதல் வெளிநாட்டு வேலைவாய்ப்பாக சிங்கப்பூரில் காயத்திரி முருகேயனின் வீட்டில் பணியாற்றுவதற்கு பியாங் சென்றிருந்தார். அதே ஆண்டு ஒக்டோபரிலிருந்து அவரை காயத்திரி தாக்கி சித்திரவதை செய்ய ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்பெண்ணின் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் ஒருநாளில் பல தடவைகள் தாக்கப்பட்டமை கண்காணிப்புக் கெமரா பதிவுகள் மூலம் அம்பலமான நிலையில், 2016 ஜூலையில் 24 வயதான பணிப்பெண் உயிரிழந்தார்.

இந்த நிலையில் காயத்திரி முருகேயன் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கூறிய அவரின் சட்டத்தரணிகள், அவருக்கு 8 அல்லது 9 வருட சிறைத்தண்டனை விதிக்குமாறு கோரியிருந்தனர்.

எனினும், காயத்திரி முருகேயனுக்கு 30 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிபதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.