• Fri. Jul 26th, 2024

பிரித்தானியப் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை கைவிடும் ஜேர்மனி

Dec 31, 2021

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை ஜேர்மன் அரசாங்கம் கைவிடவுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் மற்றும் எதிர்மறையான கோவிட்-19 சோதனை தேவைகள் வரும் ஜனவரி 4-ஆம் திகதி முதல் கைவிடப்படும் என ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.

இலண்டனில் உள்ள ஜேர்மன் தூதரகம் அதன் ட்விட்டர் பக்கத்தில், ஜனவரி 4-ஆம் திகதி நள்ளிரவு முதல் தேவைகள் கைவிடப்படும் என்று கூறியது.

அதாவது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் அல்லது பயணம் செய்ய முக்கியமான காரணம் உள்ளவர்கள் ஜேர்மனிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

பிரித்தானியாவின் போக்குவரத்து செயலாளர் கிரான்ட் ஷாப்ஸ் (Grant Shapps) தனது ட்விட்டரில், இந்த செய்தி வரவேற்கத்தக்க வளர்ச்சி என்று கூறியுள்ளார்.

ஜேர்மனி, சமீபத்தில் பிரித்தானியாவை கவலைக்குரிய ஒரு பகுதியாக வகைப்படுத்தியது.

பிரித்தானியா Omicron கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மற்றொரு அலையை அனுபவித்து வருகிறது. புதன்கிழமை தினசரி தொற்று எண்ணிக்கை 183,037-ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம் , அக்டோபர் மற்றும் நவம்பர் வரை ஜேர்மனியில் நோய்த்தொற்றுகள் செங்குத்தாக அதிகரித்தன, ஆனால் அவை டிசம்பரில் குறைந்துள்ளன.