• Sat. May 11th, 2024

இங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள் – பிரித்தானியா எச்சரிக்கை

Aug 7, 2021

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குல் தொடர்ந்து வருவதால், அங்கிருக்கும் பிரித்தானியர்கள் உடனடியாக வெளியேறும் படி எச்சரிக்கப்படுகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் இராணுவத்துக்கும், தாலிபன் பயங்கரவாத அமைப்புக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் இராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு நிலைமை மோசமாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் சரிபாதி பகுதிகள் தாலிபன்கள் வசம் உள்ள நிலையில், நாட்டை முழுவதுமாக கைப்பற்ற தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் இராணுவம், தாலிபன்களின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.

ஹேல்மாண்ட் மாகாணத்தை பிடிக்க தீவிரமாக போர் நடைபெற்று வரும் நிலையில், லஷ்கர் கா நகர சாலைகளில் நின்று தாலிபன்கள் போரிட்டு வருவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிகிடக்கின்றனர்.

இப்படி நாட்டையே முழுமையாக கைப்பற்ற தாலிபான்கள் முயற்சித்து வருவதால், உடனடியாக இங்கிருக்கும் பிரித்தானியர்கள் வெளியேறும் படி அறிவுறுத்தப்படுகிறது, ஏனெனில் இது கொடிய மற்றும் மிகவும் அழிவுகரமான கட்டம் என்று ஐ.நா விவரித்துள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து வருவதால், வணீகரீதியாக வெளியேறும் படி அறிவுறுத்தப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ஆப்கானிஸ்தானில் குறைந்தது 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், இங்கிருக்கும் 421 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இப்போது தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.

இது குறித்து நேற்று(06) நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. தூதுவர் Deborah Lyons கூறுகையில், ”சண்டை மற்றும் அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான் ஒரு புதிய போரினால் கொடிய மற்றும் மிகவும் அழிவுகரமான கட்டத்தில் உள்ளது” என்று அவர் கூறினார்.