கனடாவிலும் அமெரிக்காவின் வடமேற்கு மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சாதனை அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால், இன்று பல பாடசாலைகள் மற்றும் கொவிட்19 பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டதுடன், ஒலிம்பிக் தகுதி காண் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் லிட்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை (27) 46.6 பாகை செல்சியஸ் (116 பாகை பரனைட்) வெப்பநிலை பதிவாகியது. இந்நிலையில் கனடாவில் பதிவாகிய மிக அதிகபட்ச வெப்பநிலை இது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் இயூஜின் நகரில் 43.3 பாசை செல்சியஸ் (110 பாகை பரனைட்) வெப்பநிலை பதிவாகியது. இதனால், அமெரிக்காவின் ஒலிம்பிக் தடகள தகுதிகாண் போட்டிகள் பிற்பகலிலிருந்து மாலை நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் கனடாவின் பல வர்த்தக நிலையங்களில் கொண்டுசெல்லப்படக் கூடிய வாயு சீராக்கிகள், மின் விசிறிகள் விற்றுத் தீர்ந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. பல நகரங்களில் அவசர குளிரூட்டல் நிலையங்கள் திறக்கப்பட்டன.