
பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி மத பாடசாலையில் பணியாற்றிவந்த ஆசிரியையை சக ஆசிரியை மற்றும் மாணவிகள் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் – பக்துவா மாகாணன் டீரா இஸ்மாயில் கான் பகுதியில் ஜாமியா இஸ்லாமியா ஃபலஹுல் பினெட் என்ற இஸ்லாமிய மதப் பெண்கள் பாடசாலையில் உள்ளது. அந்த பாடசாலையில் சொஃபரா பிபி என்ற ஆசிரியை பணியாற்றி வந்துள்ளார்.
அவர் நேற்று பாடசாலையில் பணியை முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். பாடசாலை வாசல் அருகே நடந்து சென்ற சொஃபரா பிபியை அதே பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றிவந்த பெண்ணும், இரு மாணவிகளும் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த 3 பேரும் பிபியை தரையில் தள்ளி தாங்கள் வைத்திருந்த உருட்டு கட்டையால் தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு பிபியை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்தனர்.
இதனையடுத்து, பிபியை கழுத்தறுத்து கொலை செய்த சக ஆசிரியை, 2 மாணவிகள் என 3 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிபியை கொலை செய்த சக ஆசிரியையும் அந்த 2 மாணவிகளும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. அந்த மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், அந்த மாணவிகளின் உறவினரான 13 வயது சிறுமியின், தனது கனவில் இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் தோன்றியதாகவும், அவர் ஆசிரியை பிபி (கொல்லப்பட்ட ஆசிரியை) தனக்கு எதிராகவும் (நபிகள் நாயகம்) , இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இதனால் அவரை கொலை செய்யும்படியும் நபிகள் நாயகம் உத்தரவிட்டதாக அந்த சிறுமி தனது உறவினர்களான மாணவிகள், ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, இரு மாணவிகளும், மத பாடசாலையில் ஆசிரியையும் சக ஆசிரியையான பிபியை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மத பாடசாலைகளில் ஆசிரியை சக ஆசிரியை மற்றும் மாணவிகளால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.