• Sat. Jul 27th, 2024

விழுங்கிய மீனவரை காறித்துப்பிய திமிங்கலம்!

Jun 14, 2021

அமெரிக்காவின் மெசச்சுசஸ்ட் கடற்கரையில் திமிங்கலம் ஒன்று மீனவரை விழுங்கி பின்னர் துப்பிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வரும் மைக்கேல் பக்காடு என்கிற மீனவர் லாப்ஸ்டர் எனப்படும் கடலின் ஆழத்தில் இருக்கும் நண்டை பிடிப்பதற்காக கடலில் குதித்துள்ளார். அப்போது 35 அடி ஆழத்திற்குச் சென்று நீந்திக் கொண்டிருந்த ஹம்பக் வகை திமிங்கலம் எதிர்பாராவிதமாக அவரை ஒன்று விழுங்கியது.

30 விநாடிகள் திமிங்கலத்தின் இருட்டடித்த வாயில் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நீந்திக் கொண்டிருந்த நிலையில் தனக்கே உரித்தான பாணியில் கடலுக்குமேலே எகிறிகுதித்த திமிங்கலம், அவரை காறித் துப்பியுள்ளது.

இந்த நிலையில் திமிங்கலம் துப்பிய வேகத்தில் பறந்துபோய் கடலின் மேற்பரப்பில் விழுந்த மைக்கேல், கரைக்கு வந்து சேர்ந்தார். எனினும் அவருக்கு எலும்பு முறிவோ, பெரிய காயங்களோ ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறிய காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மெசச்சுசஸ்ட் திமிங்கல ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகையில்,

பொதுவாக திமிங்கலங்கள் வாயை நன்றாக திறந்தபடி நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும். குழுவாக வரும் மீன்களை அப்படியே லபக் என்று கபளீகரம் செய்துவிடும். திமிங்கலம் சென்ற நேர்கோட்டில் மைக்கேல் சிக்கிக்கொண்டார். பிறகு திமிங்கலம் என்ன நினைத்ததோ, அதிர்ஷ்டவசமாக அவரைத் துப்பிவிட்டதாக கூறியுள்ளனர்.

திமிங்கலம் வாய்க்குள் சென்று அதிர்ஷ்டவசமாக தப்பிய மீனவர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.