• Sat. Jul 27th, 2024

தேசிய அவசரகால நிலையை அறிவித்த உக்ரைன் நாடாளுமன்றம்

Feb 24, 2022

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம் படை வீரர்களையும், போர் தளவாடங்களையும் நிலைநிறுத்தியுள்ளதால் கடந்த சில வாரங்களாகவே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

ஆனால் உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் இல்லை என கூறும் ரஷியா, பெலாரஸ் நாட்டு ராணுவத்துடன் கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காகவே படைகளை குவித்துள்ளதாக சாக்குபோக்கு கூறிவருகிறது.

அதே வேளையில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிரிவினைவாதிகளை தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் உக்ரைனுக்குள் ஊடுருவதற்கான வேலைகளை ரஷியா செய்து வருகிறது.

உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதற்கான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் அந்த 2 பிராந்தியங்களிலும் ரஷிய படைகள் அமைதிக்காக்கும் பணிகளில் ஈடுபடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் உக்ரைனுக்குள் ரஷிய படைகள் நுழைவதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை புதின் பிறப்பித்துள்ளார். இதனால் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. மேலும் தலைநகர் கீவில் உள்ள ரஷிய தூதரகத்தில் இருந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் அச்சுறுத்தல் காரணமாக, தேசிய அவசரகால நிலையை அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. மேலும் ரஷியாவில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்கள் கூடிய விரைவில் அங்கிருந்து வெளியேறவேண்டும் என உக்ரைன் அரசு அறிவுறுத்தி உள்ளது. இப்படி உக்ரைன் விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வருவதால் உலக நாடுகள் கலக்கமடைந்துள்ளன.