• Wed. Jul 24th, 2024

முககவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம் – இங்கிலாந்து அரசு

Jul 5, 2021

கொரோனா வைரஸ் பரவி இருக்கும் வேலையில், டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை, மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,03,434 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 28 நாட்களுக்குள் மரணம் அடைந்த நபர்களின் பதிவாகும்.

இந்நிலையில், அந்நாட்டில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக முக கவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம் என மந்திரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, இங்கிலாந்தின் வீட்டு வசதி செயலாளர் ராபர்ட் ஜென்ரிக் கூறும்போது, நான் முககவசம் அணிய விரும்பவில்லை. அதனை பெருமளவிலான மக்களும் விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.

அதனால், தனிநபர் விருப்பம் சார்ந்த விவகாரத்திற்கு இதனை நாம் கொண்டு செல்ல இருக்கிறோம் என கூறியுள்ளார். சமூக தொடர்பு பற்றிய நடப்பில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் வருகிற 19ந்தேதி முதல் நீக்குவது பற்றி இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.