இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 77.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா தரப்பில் காஜிசோ ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்க அணி 76.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதையடுத்து 13 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 17 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற 3 வது நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளை வரை 44.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து தொடர்ந்த ஆட்டத்தில், 29 ரன்களில் விராட் கோலி ஆட்டமிழக்க அதைத் தொடர்ந்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் (7 ரன்கள்), சர்துல் தாகுர் (5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
உமேஷ் யாதவ், முகமது ஷமி இருவரும் டக் அவுட் ஆன நிலையில் இறுதியாக களமிறங்கிய பும்ராவும் 2 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் 67.3 ஓவர்கள் முடிவில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்தியா ஆல் அவுட்டானது. இதையடுத்து 212 ரன்கள் இலக்கை நோக்கி தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.