• Sat. Jul 27th, 2024

யூரோ 2020: சொந்த மண்ணில் பைனலுக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி

Jul 8, 2021

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியது.

ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. லண்டன், வெம்பிலி மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், உலக ரேங்கிங் பட்டியலில் நான்காவது இடத்திலுள்ள இங்கிலாந்து அணி, தரவரிசையில் ‘நம்பர்-10’ ஆக உள்ள டென்மார்க்கை சந்தித்தது.

போட்டி துவங்கியது முதல் அனல் பறந்த இந்த ஆட்டத்தில், 30வது நிமிடம் டென்மார்க் தனது முதல் கோலை அடித்தது. டேம்ஸ்கார்ட் தனது அணிக்காக கோல் அடித்து முன்னிலை பெற்று தந்தார்.

ஆனால், 39வது நிமிடம் டென்மார்க் வீரர் சைமன் கிஜயர் அடித்த பந்து தவறுதாக கோல் போஸ்ட்டுக்குள் நுழைய, சேம் சைட் கோல் வாயிலாக இங்கிலாந்துக்கு சமன் செய்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

இதனையடுத்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. 104வது நிமிடத்தில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் கேன், தனது அணிக்காக வெற்றி கோலை அடித்தார்.

முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது. வரும் ஞாயிறுக்கிழமை நடக்கும் பைனலில், இத்தாலியுடன் இங்கிலாந்து அணி கோப்பைக்காக மோத உள்ளது.