• Sat. Jul 27th, 2024

யூரோ 2020 : ஸ்பெய்னை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இத்தாலி

Jul 7, 2021

லண்டன் வெம்ப்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற யூரோ 2020 மிகவும் விறுவிறுப்பான முதலாவது அரை இறுதிப் போட்டியில் 4 – 2 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிபெற்ற இத்தாலி, ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இப் போட்டி மேலதிக நேர நிறைவின்போது 1 – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து வெற்றி அணியைத் தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனல்டிகளில் இத்தாலி வெற்றிபெற்றது.

ஸ்பெய்ன் வீரர் அல்வாரோ மொராட்டாவின் பெனல்டியை இத்தாலி கோல்காப்பாளர் ஜியான்லூயிஜி டொன்னாரும்மா தடுத்ததைத் தொடர்ந்து ஜோர்ஜின்ஹோ, 4ஆவது பெனல்டியை சாமர்த்தியமாக கோலினுள் புகுத்தி இத்தாலியை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றார்.

இந்த முடிவுடன் 33 சர்வதேச காலபந்தாட்டப் போட்டிகளில் இத்தாலி தோல்வி அடையாத அணியாகத் திகழ்கின்றது.

அரை இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் சரிசமமாக மோதிக்கொள்ள அரங்கில் குழுமியிருந்த சுமார் 60,000 இரசிகர்கள் பரபரப்பின் உச்சத்திற்கு இட்டுச் செல்லப்பட்டனர்.

போட்டியின் முதலாவது ஆட்டநேர பகுதியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

இடைவேளையின் பின்னர் 60ஆவது நிமிடத்தில் பந்தைத் தடுத்து நிறுத்திய டொன்னாரும்மா, துரிதமாக செயற்பட்டு எதிர்த்தாக்குதலுக்கான வியூகத்தை அமைத்துக்கொடுத்தார். கோல் காப்பாளரிடமிருந்து பந்தைப் பெற்றுக்கொண்ட சிரோ இமோபைல் உடனடியாக முன்களத்தில் உள்ள பெடெரிக்கோ சியேசாவுக்கு பரிமானார்.

சியேசா மிகவும் சாதுரியமாக பந்தை நகர்த்திச் சென்று கோலினுள் புகுத்தி இத்தாலியை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு அணியினரும் மாற்று வீரர்களை களம் இறக்கிய வண்ணம் இருந்தனர்.

போட்டியின் 80ஆவது நிமிடத்தில் டெனி ஒல்மோவின் ஒத்துழைப்புடன் மாற்று வீரர்களில் ஒருவரான அல்வாரோ மொராட்டா கோல் போட்டு ஸ்பெய்ன் சார்பாக கோல் நிலையை 1 – 1 என சமப்படுத்தினார்.

அடுத்த பத்து நிமிடங்களில் இரண்டு அணிகளாலும் வெற்றி கோலைப் போட முடியாமல்போக, 30 நிமிட மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தின் முடிவிலும் போட்டி 1 – 1 என வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து வெற்றி அணியைத் தீர்மானிக்க பெனல்டி முறையை மத்தியஸ்தர் பீலிக்ஸ் ப்றைச் (ஜேர்மனி) அமுல்படுத்தினார்.

பெனல்டிகள்

இத்தாலி ஸ்பெய்ன்
மெனுவல் லொக்காடெல்லி 0 – 0 டெனி ஒல்மோ
அண்ட்றியா பெலோட்டி 1 – 1 ஜெரார்ட் மொரினோ
லெனார்டோ பொனூக்கி 2 – 2 தியாகோ அல்கென்டாரா
பெட்ரிகோ பேர்னாடெஷி 3 – 2 அல்வாரோ மொராட்டா
ஜோர்ஜின்ஹோ 4 – 2 ………………………………………

பெனல்டி(Penalty) முறையில் 4 – 2 என இத்தாலி வெற்றி.