• Sat. Oct 19th, 2024

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஐசிசி; இலங்கை அணிக்கு வந்த அடுத்த அதிர்ச்சி

Jul 22, 2021

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நிலையில் இலங்கை அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியால், இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 160 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து, கிட்டத்தட்ட தோல்வி பெறும் நிலைக்கு இந்திய அணி சென்றது.

அப்போது ஜோடி சேர்ந்த தீபக் சஹார் மற்றும் புவனேஷ்வர் குமார் கூட்டணி, இலங்கை பவுலர்களுக்கு சோதனை கொடுக்க ஆரம்பித்தது. இதனால் கடைசி வரை இவர்கள் இருவரையும் இலங்கை அணியால் அவுட்டாக்க முடியவில்லை.

இதனை அடுத்து 49.1 ஓவர்களில் 277 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் 160 ரன்களுக்கு உள்ளாகவே இலங்கை அணி அவுட்டாகி விட்டது.

அப்படி இருந்தும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் கடைசி வரை நின்று வெற்றியை பறித்து சென்றது, இலங்கை வீரர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரும் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், மெதுவாக விளையாடியதாக இலங்கை அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.

ஏற்கனவே இந்திய அணியிடம் நூலிழையில் வெற்றியை பறிகொடுத்த இலங்கை அணிக்கு, ஐசிசி அபராதம் விதித்துள்ளமை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.