• Thu. Oct 17th, 2024

இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர் : 100% ரசிகர்கள் அனுமதி

Mar 12, 2022

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் பெங்களூரில் இன்று முதல் (மார்ச் 12) பகலிரவு ஆட்டமாக 2 வது டெஸ்ட் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் பெங்களூர் மைதானத்துக்கு 50% ரசிகர்களே அனுமதிக்கப்பட்டார்கள்.

எனினும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக இந்தியா முழுக்க குறைவாக உள்ளதால் தற்போது 100% ரசிகர்களுக்கு அனுமதி வழங்குவதாக கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. மாநில அரசின் அனுமதி கிடைத்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்டுக்கான ஒருநாள் டிக்கெட்டுக்கு ரூ. 100 முதல் ரூ. 1250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

முதல் இரு நாள்களுக்கு 10,000 டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாகவும் கூடுதல் டிக்கெட்டுகளை இன்று முதல் விற்பனை செய்யவுள்ளதாகவும் கர்நாடக கிரிக்கெட் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.