• Fri. Dec 6th, 2024

கொரோனா பாதிப்பால் போட்டிகள் ஒத்திவைப்பு!

Dec 23, 2021

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் சில போட்டிகள் கொரோனா தொற்று எதிரொலியால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், லிவர்பூல்-லீட்ஸ் மற்றும் வோல்வ்ஸ்-வாட்போர்டு அணிகளுக்கு இடையேயான போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள லிவர்பூல் அணியை எதிர்த்து 16ம் இடத்தில் உள்ள லீட்ஸ் யுனைடட் அணி விளையாட இருந்தது.

மற்றொரு ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் 8ம் இடத்தில் உள்ள வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரெர்ஸ் அணியை எதிர்த்து 17ம் இடத்தில் உள்ள வாட்போர்டு அணி விளையாட இருந்தது.

இந்த நிலையில், இந்த கிளப் அணி வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற இருந்த பர்ன்லி-ஆஸ்டன் வில்லா அணிகளுக்கு இடையேயான போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதைப்போலவே, கடந்த வாரம் நடைபெற இருந்த 10 போட்டிகளில் 6 போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற காணொலி வாயிலான கூட்டத்தின் முடிவில் அனைத்து கிளப் அணிகளும் ஒருமனதாக பிரீமியர் லீக் கோப்பை போட்டிகளை தொடர்ந்து நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்தன.

கடந்த வாரத்தில் மட்டும் இந்த தொடரில் பங்கேற்கும் 90க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.