• Sat. Jul 27th, 2024

ஹெல்மெட்டை தாக்கிய பந்து- பாதியிலேயே வெளியேறிய மந்தனா

Feb 28, 2022

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 4-ந்தேதி நியூசிலாந்தில் தொடங்குகிறது.

இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன.பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நேற்று தென்ஆப்பிரிக்காவுடன் ரங்கியாரா நகரில் மோதியது.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்தது. ஹர்மன்பிரீத் கவுர் சதம் (103 ரன், 114 பந்து, 9 பவுண்டரி) அடித்தார். கேப்டன் மிதாலிராஜ் (0) ரன்-அவுட் ஆனார். தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 242 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

முன்னதாக இந்திய தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனாவை (12 ரன், 23 பந்து) பந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் வீசிய ‘பவுன்சர்’ பந்து அவரது ஹெல்மெட்டை பலமாக தாக்கியது.

இதனையடுத்து உடனடியாக இந்திய அணியின் மருத்துவர் அவரை பரிசோதித்தார்.

அவரது பார்வையில் தடுமாற்றம் தெரிந்தது. ஆனால் தலையில் பாதிப்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அவர் கூறியதால் தொடர்ந்து பேட் செய்தார்.

இருப்பினும் சிறிது நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ‘ரிட்டயர்ட்ஹர்ட்’ ஆகி பாதியிலேயே வெளியேறினார். இந்திய அணி தனது 2-வது பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை நாளை சந்திக்கிறது.