• Fri. Nov 22nd, 2024

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடக்குமா?

Nov 15, 2021

இந்தியா – பாகிஸ்தான் விளையாட வேண்டுமா வேண்டாமா என்பதை அந்த நாடுகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் , அதை கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்ய முடியாது எனவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும்.

இருநாட்டு அரசுகளுக்கிடையே சுமுக உறவு இல்லாததால், 2012க்கு பிறகு, கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை.

ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன. கடைசியாக 2012ஆம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தான் அணி 2 டி20 போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியது.

இதில் டி20 தொடர் சமனில் முடிய, ஒரு நாள் தொடரைப் பாகிஸ்தான் கைப்பற்றியது. அதன் பிறகு இரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் எதுவும் நடைபெறவில்லை.

அதன் பிறகு உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதின. அதன்படி இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை எளிதாக 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது .

ஐசிசி தொடரில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும். இந்த தொடரில் இந்திய அணி ‘சூப்பர் 12’ சுற்றுடனும், பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுடனும் வெளியேறியது.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஷார்ஜா 40வது சர்வதேச புத்தக கண்காட்சியில் பேசிய கங்குலி, “இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுவது, கிரிக்கெட் வாரியங்களின் கையில் இல்லை.

உலகக் கோப்பை போட்டிகளில், இரு அணிகளும் விளையாடுகின்றன. இருதரப்பு கிரிக்கெட் தொடர் பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாட்டு அணிகள் விளையாட வேண்டுமா வேண்டாமா என்பதை அந்த நாடுகள் தான் முடிவு செய்ய வேண்டும். இது நானோ அல்லது ரமீஸ் ராஜாவோ (பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்) முடிவு செய்ய முடியாது” என்றார்.

இதெவேளை முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா கூறுகையில், ”இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தொடரை நடத்துவது சாத்தியமில்லை” என்றார்.

ஐசிசி அமைப்பின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், ”இரு அணியும் ஐசிசி தொடர்களைத் தாண்டி மோதிக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

ஆனால் இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை” என அவர் கூறினார்.