• Fri. Nov 22nd, 2024

இலங்கையின் செயற்பாடுகளுக்கு கண்டணம்

Jun 22, 2021

இலங்கையின் செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்சலெட் நேற்று (21) கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 47வது அமர்வு நேற்று (21) ஜெனீவாவில் ஆரம்பமானது.

இதில் தமது அறிக்கையை வெளியிட்டு அவர் இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நட்டயீட்டுக்கான அலுவலகம் என்பவற்றுக்கான புதிய நியமனங்கள் வருத்தமளிக்கின்றன.

மேலும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களை இலக்கு வைத்து இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் என்பவற்றையும் மிச்சல் பெச்சலட் தமது அறிக்கையில் வன்மையாக கண்டித்துள்ளார்.

குறிப்பாக யுத்த காலத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழ் மக்களுக்கு அனுமதிக்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக அவர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் தொடர்பாடல்களை மேற்கொண்டு, இந்நிலைமைகள் குறித்த முன்னேற்றத்தை செப்டம்பர் மாத அமர்வில் வைத்து அறிவிக்கவிருப்பதாகவும் மிச்சல் பெச்சலெட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காவல்துறை தடுப்பில் வைத்து கைதிகள் உயிரிழக்கின்ற சம்பவங்கள் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.