• Thu. Nov 21st, 2024

மீண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரைப் பரிந்துரை செய்த ஜோ பைடன்!

Jul 17, 2021

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், பல்வேறு உயர்மட்ட பதவிகளுக்கான அதிகாரிகளை அவர் பரிந்துரை செய்து வருகிறார்.

அதிலும் குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் அமெரிக்க அரசின் பல்வேறு உயர் பதவிகளுக்கு பரிந்துரைக்க்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்க தொழிலாளா் நலத்துறையின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்புக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா(48) என்பவரை ஆதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.

இந்த பரிந்துரையின் மீதான வாக்கெடுப்பு அமெரிக்கா நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபையில் நடைபெற்றது. அதில், சீமா நந்தாவின் நியமனத்துக்கு ஆதரவாக 53 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகின.

இதையடுத்து சீமா நந்தாவை அமெரிக்க தொழிலாளா் நலத்துறையின் தலைமை சட்ட அதிகாரியாக நியமிக்க, நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் அவரது நியமனம் சட்டபூா்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழு தலைமைச் செயலதிகாரியாகப் பொறுப்பு வகித்துள்ள சீமா நந்தா, ஒபாமா ஆட்சிக் காலத்தின்போது தொழிலாளா் நலத்துறையில் துணை ஆலோசகராகவும் துணை சட்ட அதிகாரியாகவும் பொறுப்பு வகித்துள்ளாா்.

மேலும் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு தொடா்பான வழக்கறிஞராக அவா் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.