• Tue. Nov 28th, 2023

தலிபான்களின் தாக்குதலில் மரணமடைந்த இந்திய புகைப்படச் செய்தியாளர்!

Jul 17, 2021

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் டேனிஷ்சித்திக் மரணமடைந்தார்.

மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திக் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வேகமாக முன்னேறி வரும் நிலையில் அங்கு நடக்கும் அரசியல் மாற்றங்களை புகைப்படச் செய்திகளாக வெளியிட்டு வந்தார். முக்கியமாக கந்தகாரில் தலிபான் படைகள் முன்னேறி வருவதை இவர் நெருக்கமாக இருந்து படம்பிடித்து வந்தார்.

இந்த நிலையில் கந்தகாரில் ஸ்பின் போட்லாக் என்ற பகுதியில் இன்று டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். ஆப்கான் ராணுவம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியது.

அப்போது அங்கு செய்தி சேகரித்துக்கொண்டு இருந்த சித்திக் கொல்லப்பட்டார். தனது திறமைக்குச் சான்றாக உயரிய புலிட்சர் பரிசு வென்றவரான டேனிஷ் சித்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.