நாட்டில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் அவசரகால நிலைமையின் ஊடாக ஜனாதிபதி ஆட்சியே நடக்கும். ஜனாதிபதி தான்விரும்பிய படி அவசரகால விதிமுறைகளை வகுக்க முடியும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அவற்றையெல்லாம் சட்டமாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
சென்றடையும் என்றார்.
ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன், நாடு பூராவும் அவசரகால
நிலைமையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அதிவிசேட வர்த்தமானி தொடர்பில் கருத்துரைக்கும் போதே, தனது டுவிட்டர் பதிவில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், உணவு விநியோகத்துக்கும் அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் நேற்று முதல் (நேற்று முன்தினம் 30ஆம் திகதி) அவசரகால நிலைமை நாடு முழுவது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால், அல்லது அதனோடிணைந்த சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தை பயன்படுத்த முடியும்“ என்றார்.
இதனால்தான், பொதுமக்கள் பொதுபாதுகாப்பு சுகாதார அவசரகால
நிலைமைகள் சட்டத்தை உருவாக்குமாறு நான் கோரியியிருந்தேன்.
தனிநபர் பிரேரணையாக அதற்கான யோசனைகளை சமர்ப்பித்துள்ளேன். அதனை
ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. எனினும்,
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனூடாக ஆபத்து உள்ளது. அதாவது ஜனாதிபதி ஆட்சியே நாட்டில் நடைபெறும். அவசரகால விதிமுறைகளை விரும்பியபடி வகுக்க முடியும் சட்டமாக்கவும் முடியும். ஆகையால், இச்செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் சுமந்திரன் எம்.பி மேலும் தெரிவித்தார்.