இலங்கையில் கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதிமுதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் நீடிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கப்படுமா? அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்படுமா என்பது தொடர்பில், இன்றையதினம்(17) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
கொவிட்-19 தொற்றொழிப்பு செயலணியின் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (17) கூடுகின்றது. கடந்தவாரம் கூடியபோது, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை செப்டெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
எனினும், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதாயின் எவ்வாறான கட்டுப்பாடுகளுடன் தளர்த்த வேண்டும் என்பது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு உரிய தரப்பினர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தனர்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் அச்செயலணி கூடவிருக்கிறது. எனினும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் கொரோனா மரணங்கள், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவை கவனத்தில் கொண்டு, போக்குவரத்து கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.