சென்னையில், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது நாளாக களத்தில் இறங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக கனமழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3வது நாளாக தனது ஆய்வு பணியை முதல்வர் மேற்கொண்டு வருகிறார். அதன்படி சென்னை கொளத்தூர் தொகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அது மட்டுமின்றி அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மருத்துவ முகாமையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். உடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் பல உயரதிகாரிகள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய சிறப்பு மருத்துவ முகாமையும் முதல்வர் நேரில் பார்வையிட்டு வருகிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக மருத்துவ முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அவர்கள் மழையால் பாதிக்கப்பட்டால் எவ்வித மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவரின் அறிவுரைப்படி மருந்து பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.