இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்ற தென்னிந்திய மாநாட்டில் தமிழை ஆட்சி மொழியாவும் திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நேற்று 29வது தென் மண்டல மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்துவருவதால் அவருக்கு பதிலாக அமைச்சர் பொன்முடி இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரையை பொன்முடி வாசித்தார்.
அதில், மாநிலங்களுக்குக் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட வளங்களை நியாயமான முறையில் பயன்படுத்துவதில் அண்டை நாடுகளிடையே ஒற்றுமை முக்கியமானது என்றும் நம்மிடம் பொதுவான உணவு வகைகள், வானிலை மற்றும் பொதுவான மதிப்புகள் உள்ளன.
நமது சகோதரர்கள் பலர் அண்டை மாநிலங்களில் அவர்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களுடன் முழுமையாக இணைந்து வாழ்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வெள்ள நிலைமை காரணமாக மாநாட்டில் பங்கேற்க முடியாததற்காக ஸ்டாலின் வருத்தமும் தெரிவித்திருந்தார்.
இந்தியாவின் செம்மொழிகளில் முதன்முதலாக அந்த அந்தஸ்தைப் பெற்றதும் தமிழ் மொழி தான்.
தமிழ் மொழி ஏற்கனவே இலங்கை, சிங்கப்பூர் நாடுகளில் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, தென் ஆப்பிரிக்காவில் சிறுபான்மை மொழியாகவும் உள்ளது. செம்மொழியாம் தமிழ் மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் திருக்குறளை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.