• Fri. Nov 22nd, 2024

இந்த நூற்றாண்டுடைய நீண்ட சந்திர கிரகணம் இன்று!

Nov 19, 2021

சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் நிகழ்கின்றன. சந்திரனை பூமி முழுமையாக மறைத்தால் அது முழு சந்திர கிரகணம் என்றும், ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி கிரகணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இன்று (19) நடைபெற உள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 11.32 மணி முதல் மாலை 5.34 மணிவரை, அதாவது 6 மணி 2 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.

இதற்கு முன்பு நீண்ட சந்திர கிரகணம் 1440-ம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி ஏற்பட்டது. சுமார் 580 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இத்தகைய நிகழ்வு மீண்டும் 2,669-ம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் திகதி தோன்றும்.

இந்த சந்திர கிரகணத்தை வடகிழக்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, பசிபிக் பெருங்கடல் பகுதிகள், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் பார்க்க முடியும்.

இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு பகுதிகளில் சந்திர உதயத்துக்கு பின்னர் மிகவும் குறுகிய நேரம் கிரகணம் தென்படும். தமிழகம் உள்பட பிற பகுதிகளில் தெரியாது என்று வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.