இந்தியாவில் பரவி வரும் திரிபடைந்த கொவிட் தொற்றான டெல்டா வைரஸ், அதிகளவில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கொவிட் திரிபாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவில் இரண்டாவது கொவிட் அலை ஏற்படுவதற்கு இந்த கொவிட் திரிபு முக்கிய காரணமாக அமைந்தது.
அத்துடன், ஏனைய கொவிட் திரிபுகளை விட டெல்டா வகை கொவிட் திரிபு, 50 சதவீதம் அதிகம் பரவும் தன்மையைக் கொண்டதென ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொவிட் பரவல் குறைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் டெல்டா வகை கொவிட் வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், டெல்டா வகை கொவிட் தொற்றில் மீண்டும் மரபணு மாற்றமடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றமடைந்த டெல்டா வகை கொரோனாவிற்கு டெல்டா ப்ளஸ் (டெல்டா +) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 6 பேர் டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் 14 பேருக்கும், ஜப்பானில் 13 பேருக்கும், போர்த்துக்கலில் 12 பேருக்கும், போலந்தில் 9 பேருக்கும், சுவிட்சர்லாந்தில் 4 பேருக்கும், நேபாளத்தில் இருவருக்கும், கனடா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் தலா ஒருவருக்கும் டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த புதிய கொவிட் வைரஸின் பண்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.