கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் ஒரு வீட்டில் மாட்டு தொழுவத்தில் ஒரு நாகப்பாம்பு சிக்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அதனைப் பிடிக்க கேரளாவின் பிரபல பாம்பு பிடி வீரரான வாவா சுரேஷ் சென்றார்.
அவர் பாம்பை பிடித்து சாக்கில் அடைக்க முயன்ற போது, அந்த பாம்பு அவரது வலது தொடையில் கடுமையாக தீண்டியது . அதன் பின்னர் அவர் அந்த பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்துவிட்டு, முதலில் கோட்டயம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையிக்கு சென்று முதலுதவி பெற்றார்.
பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன்படி அவருக்கு அங்கு தனி மருத்துவர் குழு அமைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அவர் சிகிச்சையின் பலனாக முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாவா சுரேஷ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது அவர்களது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘தான் உயிருடன் இருக்கும்வரை பாம்புகளை பிடிப்பேன். மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவேன். இது எனக்கு மறுபிறவி’ என வாவா சுரேஷ் தெரிவித்துள்ளார்.